கோபமாக வெளியேறிய திமுக அமைச்சர்… அரசு நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் பன்றிக் காய்ச்சல், ஸ்வைன் ஃப்ளூ, டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்களை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறையின் சார்பில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன

தமிழக முழுவதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையிலும் , ஊழியர்களுக்கு உரிய பயிற்சியை வழங்கும் நோக்கிலும் தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் இன்றைய தினம் சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பயிற்சி மையத்தில் காலை 10 மணி அளவில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கான பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மொத்தமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 1,000 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நேரடியாகவும் , மற்ற மாவட்டங்களை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு காணொளி காட்சி வாயிலாகவும் நடைபெற இருந்த இந்த பயிற்சி முகாமின் தொடக்கி வைக்க அமைச்சர் மா சுப்பிரமணியன் வருகை புரிந்திருந்தார்.

தமிழ் தாய் வாழ்த்து பாடல் நிறைவடைந்த நிலையில், பயிற்சி முகாம் தொடங்கப்படுவதற்கு முன்பே உரிய ஏற்பாடு செய்யப்படவில்லை என அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் மேடையில் இருந்து கோபத்துடன் வெளியேறினார்.

அமைச்சரின் இந்த நடவடிக்கையால் விழி பிதுங்கி போன அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். பயிற்சி என்ற பெயரில் பெயரளவில் 500 செவிலியர்களை மட்டுமே வரவழைத்து அதிகாரிகள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததாகவும், இதுபோன்ற நிகழ்ச்சிகளால் எந்தப் பயனும் இல்லை என அதிகாரிகளிடம் அமைச்சர் கோபத்துடன் கடிந்து கொண்டதாகவும் தெரிகிறது.

ஆ.ராசா எம்பி. அமைச்சர் பொன்முடி என்ற திமுகவின் முக்கிய பிரமுகர்கள் பொதுவெளியில் அண்மையில் வெளியிட்ட சில கருத்துகளால் சர்ச்சையில் சிக்கியுல்ள நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு நிகழ்ச்சியில் இருந்து கோபமாக வெளியேறி உள்ளது மற்றொரு சர்ச்சைக்கும், எதிர்க்கட்சிகளின் தேவையற்ற விமர்சனங்களுக்கும் வழிவகுப்பதாக அமைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.