மதுரை: ‘முதுநிலை ஆசிரியர் தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் வன்னியர் உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை’ என உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீர்மரபினர் சங்கத் தலைவர் ஜெபமணி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் 28-ல் முதுநிலை ஆசிரியர் உடற்கல்வி பயிற்றுனர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (வன்னியர்), சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என 3 பிரிவாக பிரிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இவ்வாறு 3 பிரிவின் கீழ் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதை கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் உடற்கல்வி பயிற்றுனர் தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது. விரைவில் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற உள்ளது. இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 3 பிரிவுகளின் கீழ் பிரித்து வெளியிடப்பட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று விசாரித்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்த மனுவில், முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வன்னியர் உள்ஒதுக்கீடு இல்லாமல்தான் தயாரிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்டு மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.