இரானில் கடந்த சில நாள்களாகவே இஸ்லாமியப் பெண்கள் அதிக அளவில் அரசின் புதிய ஆடைக்கட்டுபாட்டுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். அரசின் இந்த புதிய ஆடைக்கட்டுப்பாடு மட்டுமல்லாது இதற்கு முக்கிய காரணம், ஹிஜாப் சரியாக அணியவில்லை என போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட மஹ்சா அமினி (Mahsa Amini) என்ற பெண் போலீஸ் காவலிலேயே இறந்ததுதான் என்கிறார்கள்.
இதில் ஆத்திரமடைந்த இஸ்லாமியப் பெண்கள் முதலில், ஹிஜாப்பை எரித்தும், தங்களின் தலைமுடியை வெட்டியும் அரசுக்கு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதையடுத்துதான் இஸ்லாமியப் பெண்கள், இரான் முழுவதும் தற்போது கடும் போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும் இந்தப் போராட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இரானின் கராஜ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில், ஹடிஸ் நஜாஃபி(Hadis Najafi) எனும் 20 வயது இளம்பெண், பாதுகாப்புப் படையினரால் 6 முறை சுடப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
டிக்டாக், இன்ஸ்டாகிராமில் பிரபலமானவராக அறியப்படும் ஹடிஸ் நஜாஃபி உடலில் முகம், கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் 6 முறை சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். அரசுக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்புபடையினரின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலால் நேர்ந்த ஹடிஸ் நஜாஃபியின் மரணம் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.