புதுடெல்லி: பழம்பெரும் பாலிவுட் நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. சத்யஜித் ரே, திலீப்குமார், லதா மங்கேஷ்கர், ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி கணேசன், கே.பாலசந்தர், ரஜினிகாந்த் ஆகிய மூவர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்கள். 2019-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த விழாவில் ரஜினிக்கு பால்கே விருது வழங்கப்பட்டது.
இப்போது 2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று அறிவித்தார். பாலிவுட்டில் 1960, 1970களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஆஷா பரேக். குஜராத்தைச் சேர்ந்த இவருக்கு வயது 79. 1952 முதல் 1999 வரை திரையுலகில் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இவர் திரைப்பட இயக்குனராகவும் இருந்துள்ளார். திலீப்குமார்,தேவ் ஆனந்த், ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, அமிதாப் பச்சன் உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். ஏற்கனவே 1992ல் ஆஷா பரேக் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.