புதுடெல்லி: அரசியல் சாசன அமர்வில் நடைபெறும் வழக்கு விசாரணையின் நேரலை ஒளிபரப்பை உச்ச நீதிமன்றம் நேற்று தொடங்கியது.
உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வில் நடைபெறும் அனைத்து வழக்கு விசாரணையையும் நேரலை ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி ஸ்வப்னில் திரிபாதி என்பவர் வழக்கு தொடுத்தார். இதன் மூலம் பொதுமக்கள் நலன் சார்ந்த வழக்குகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும் என மனுவில் கூறியிருந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, 2018-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம்தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வில் நடைபெறும் அனைத்து வழக்கு விசாரணைகளும் படிப்படியாக நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில், ஸ்வப்னில் திரிபாதி வழக்கில் 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை 27-ம் தேதி முதல் அமல்படுத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதன்படி, அரசியல் சாசன அமர்வு விசாரணையின் நேரடி ஒளிபரப்பு நேற்று தொடங்கியது. இனிமேல், உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை பொதுமக்கள் தங்கள் செல்போன், லேப்டாப் மற்றும்கணினிகளில் நேரலையாக காண முடியும்.
இதனிடையே, பாஜக முன்னாள் நிர்வாகி கே.என்.கோவிந்தாச்சார்யாவின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில், “உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலை ஒளிபரப்பு செய்யும் காப்புரிமையை யூடியூப் போன்ற தனியாரிடம் விட்டுவிடக்கூடாது” எனக் கோரி உள்ளார்.
இதுகுறித்து தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு கூறும்போது, “தற்காலிகமாக யூடியூபில் நேரலை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கென தனியாக ஒரு தளம் நிறுவப்படும். காப்புரிமை விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றனர். இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன்பு தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ஓய்வு பெற்றார். அன்றைய தினம் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக நேரலை ஒளிபரப்பு (வெப்காஸ்ட் போர்ட்டல்) செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.