சென்னை: தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் அனைத்துவிதமான தற்காலிக பகுதிநேர பணியில் இருக்கும் 16 ஆயிரம் ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் 60 வயது வரை தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் செப்.10-ம் தேதி அறிவித்தார். அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பகுதி நேர பயிற்றுநர்கள், பாதுகாவலர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நடப்பாண்டு செப்டம்பர் முதல் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தி ஆணையிடப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மற்றும் வட்டாரவள மையங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.