பெங்களூரு: பெங்களூரு எச்ஏஎல் நிறுவனத்தில் கிரையோஜெனிக் இன்ஜின் உற்பத்தி வசதியை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று தொடங்கி வைத்தார். பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுனவனத்தில் இயங்கும் ஏரோஸ்பேஸ் பிரிவில் கிரையோஜெனிக் இன்ஜின்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் 2013ம் ஆண்டு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் 2016ம் ஆண்டு ரூ.208 கோடி முதலீடாக திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி 4500 சதுர மீட்டர் பரப்பளவில் 70க்கும் மேற்பட்ட உயர்தர கருவிகள் மற்றும் பரிசோதனை வசதிகள் அடங்கிய கிரையோஜெனிக் மற்றும் செமி கிரையோஜெனிக் இன்ஜின்கள் வடிவமைப்பு மையம் உருவாக்கப்பட்டது.
இந்த மையத்தில் இஸ்ரோவின் ராக்கெட் இன்ஜின்கள் வடிவமைப்பு ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று தொடங்கிவைத்தார். இதில் ஆளுநர் தாவர்சந்த்கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, இஸ்ரோ தலைவர் சோம்நாத், எச்ஏஎல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனந்தகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ராக்கெட் இன்ஜின் வடிவமைப்பு மையத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது. இன்ஜின் மாதிரிகள் 2023 மார்ச்சில் வெளியாகும். கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே ஈடுபட்டு வந்தன. இந்தியா 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி ஜிஎஸ்எல்வி-டி5 என்ற ராக்கெட்டை கிரோயோஜனிக் மூலம் விண்ணில் செலுத்தியது.