ஒன் பை டூ

வினோஜ் பி. செல்வம், மாநிலச் செயலாளர், பா.ஜ.க

“உண்மையைச் சொல்லியிருக்கிறார். கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தியாவிலுள்ள அனைத்துத் துறைகளின் முன்னேற்றத்திலும் பிரதமர் அதிக கவனம் செலுத்திவருகிறார். அதனால்தான் பொருளாதார வளர்ச்சியில் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா முன்னேறியிருக்கிறது. குறிப்பாக விவசாயிகளின் முன்னேற்றத்துக்காகவும், வேளாண்துறை வளர்ச்சிக்காகவும் பிரதமர் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். அதன் விளைவாகவே இந்திய விவசாயிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவு அதிகரித்திருக்கிறது. இன்றைய தேதிக்கு விருதுநகரில் உள்ள ஒரு விவசாயி, தான் விளைவித்த பொருள்களை எந்த இடைத்தரகரின் உதவியும் இல்லாமல் சிங்கப்பூருக்கும், துபாய்க்கும் ஏற்றுமதி செய்யமுடியும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. நேரடிச் சந்தை விற்பனை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. கொரோனா காலகட்டத்தில், 13 கோடி விவசாயிகளுக்குத் தவணை முறையில் தலா 6,000 ரூபாய் நேரிடையாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்பட்டது. இதுவே கடந்த ஆட்சியாக இருந்திருந்தால், நிச்சயம் கமிஷன் போக சொற்ப தொகைதான் கிடைத்திருக்கும். விவசாயிகளின் வளர்ச்சிக்காகப் பல புதிய திட்டங்கள், கடன் உதவி, பயிர்க் காப்பீடு, சலுகை என அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறார். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தையும் உயர்த்தியிருக்கிறார் பிரதமர் மோடி.’’

வினோஜ் பி. செல்வம்
கனகராஜ்

கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர், சி.பி.எம்

“அப்பட்டமான பொய். பா.ஜ.க அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்துக்கு எதிராக மாதக்கணக்கில் டெல்லி முற்றுகையிடப்பட்டதையும், பா.ஜ.க-வினரால் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டதையும் மறந்துவிட்டார்களா… மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே, பிரதமர் பயிர்க் காப்பீடு திட்டம் செயலில் இருக்கிறது. 2014-க்கு முன்பாக, இந்தக் காப்பீட்டுத் திட்டத்துக்கு, ஒன்றிய அரசும், மாநில அரசும் தலா 49 சதவிகிதமும், விவசாயிகள் தரப்பில் 2 சதவிகிதமும் வழங்க வேண்டும். ஆனால், 2016-க்குப் பிறகு, ஒன்றிய அரசின் பங்கை 23 சதவிகித மாகக் குறைத்தது பா.ஜ.க அரசு. தற்சமயம் அந்தந்த மாநில அரசுதான் 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் கூடுதல் தொகை வழங்குகிறது. ‘விளைபொருளுக்கு 1.5 மடங்கு அதிக விலை, 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்குப் பென்ஷன்’ என்றெல்லாம் 2014 தேர்தல் அறிக்கையில் சொன்னது பா.ஜ.க. அது பற்றி இன்றுவரை மோடி வாய் திறக்கவில்லை. இந்தியாவின் மொத்த கோதுமை உற்பத்தி 1.6 கோடி டன் குறைந்திருக்கிறது. இந்திய உணவுக் கழகம் கோதுமை கொள்முதலைப் பெருமளவு குறைத்திருக்கிறது. இதனால், விளைபொருளைத் தனியாருக்கு விற்கும் நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. விவசாயி நிம்மதியாக விவசாயம் செய்ய முடியாமல்,‘இந்திய வேளாண்மையைக் குழிதோண்டிப் புதைத்தவர் மோடி’ என்று சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.