சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மாத்தூர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி செல்வராஜ். இவரது இளைய மகள் சினேகா (22), காரைக்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு கணிதம் படித்து வந்தார். இவர் இலுப்புக்குடி புது குடியிருப்பத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற சென்ட்ரிங் வேலை செய்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சினேகாவை திருமணம் செய்து வைக்க கோரி அவரது வீட்டுக்கு சென்று கண்ணன் பெண் கேட்டுள்ளார். அப்போது சினேகாவின் பெற்றோர், சினேகாவின் அக்காவுக்கு இன்னும் திருமணம் ஆகாமல் வீட்டில் உள்ளதால் அவருக்கு திருமணம் முடிந்த பின்பு தான் சினேகாவின் திருமணம் குறித்து பேச முடியும் என்று கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு கண்ணன் சினேகாவின் தாத்தாவை கீழே தள்ளிவிட்டுள்ளார்.
அதில் காயமடைந்ததால் சினேகாவின் தந்தை சாக்கோட்டை காவல் நிலையத்தில் கண்ணன் மீது புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் கண்ணனை எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்திற்கு பின் சினேகாவுக்கும், கண்ணனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு அவர்களது காதலில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கண்ணன், தான் சினேகாவிடம் கொடுத்து வைத்திருந்த பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை தருமாறு செல்போனில் கேட்டுள்ளார். இதைதொடர்ந்து சினேகா, அதை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் மாத்தூர் ரேஷன் கடை அருகே வந்தார். அங்கு மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரும்பு கம்பியால் சினேகாவின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் படுகாயமடைந்த சினேகா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்ததை கண்ட கண்ணன் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். சிறிது நேரத்தில் சினேகா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் சாக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.