திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா: முதல்-மந்திரி சாமி தரிசனம்

திருமலை,

கொரோனா தொற்று பரவலால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர பிரம்மோற்சவ விழா பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவில் உள்ளேயே நடந்தது. கோவிலின் நான்கு மாடவீதிகளில் வாகன சேவை நடக்கவில்லை.

இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்கிறது. கோவிலின் நான்கு மாடவீதிகளில் பிரமாண்டமாக வாகன சேவை நடக்கிறது.

விழாவின் தொடக்க நாளான நேற்று அதிகாலை 3 மணியளவில் மூலவருக்கு சுப்ரபாத சேவை நடந்தது. அதன் பிறகு பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மாலையில் தங்கத் திருச்சி வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வாகன வீதிஉலாவுக்கு முன்னால் சிவப்பு நிறத்தில் கருடன் உருவம் வரையப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடியை பக்தர்களும், கோவில் ஊழியர்களும் பக்தி கோஷம் முழங்க ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.

இதையடுத்து முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் பிரம்மோற்சவ விழாவுக்காக அழைப்பு விடுக்கும் வகையில் கொடியேற்றும் நிகழ்ச்சி தொடங்கியது. வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத பிரதான அர்ச்சகர்களும், கங்கணப்பட்டரும் சிறப்புப்பூஜைகளை செய்து, மாலையில் தங்கக் கொடிமரத்தில் மீன லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கருடகொடியை ஏற்றினர். அப்போது கொடி மரத்துக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அத்துடன் கொடியேற்றும் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

அதன் பிறகு இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை பெரிய சேஷ வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு தங்கம், வைரம், வைடூரியம் உள்ளிட்ட நவரத்தினங்களை அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

முதல்-மந்திரி சாமி தரிசனம்

இதற்கிடையே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி சாமி தரிசனம் செய்தார். அப்போது அலிபிரியில் 10 மின்சார பஸ்களை அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் ஒரு வெள்ளித்தட்டில் பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட மங்கல பொருட்களை எடுத்து, அதனை முதல்-மந்திரி தனது தலை மீது வைத்து கோவிலுக்கு எடுத்து வந்தார்.

இதனையடுத்து மூலவர் ஏழுமலையானிடம் வஸ்திரங்கள் மற்றும் மங்கல பொருட்களை சமர்ப்பணம் செய்து, வழிபட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.