பரந்தூர்: சென்னை அருகே பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படும் கிராம மக்கள், மாநில அரசுக்கு எதிராக 64வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். நேற்று இரவு தமிழகஅரசுக்கு எதிராக ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.
சென்னையின் புதிய 2வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ளது. இதையடுத்து புதிய விமான நிலையதிற்காக பரந்தூர், ஏகனாபுரம், நாகபட்டு, நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம பகுதிகளில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த விமான நிலையத்தால் 3000 ஏக்கர் விலை நிலங்கள், 1000 குடியிருப்புகள், நீர்வளங்கள், விவசாய நிலங்கள், அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்படும் மக்களுக்கு அவர்களின் நிலத்தின் மதிப்பைவிட 3 மடங்கு அதிகம் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை தமிழகஅரசு முடுக்கி விட்டுள்ளது. இதற்கு அந்த பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விமான நிலையம் குறித்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் பல்வேறு கட்ட போரட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் இன்று 64வது நாளாக தொடர்கிறது. நேற்று (63வதுநாள்) இரவு நடைபெற்ற போராட்டத்தில், பெண்கள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, தங்களது ஊரை விட்டு வெளியேற மாட்டோம் என கூறி பெண்கள் ஒப்பாரி வைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே பரந்தூர் பகுதிகளுக்கு வெளி ஆட்கள், அரசியல் கட்சியினர் சென்ன தமிழகஅரசு தடை விதித்து, சுற்றிலும் காவலர்களை கொண்டு பாதுகாப்பு போட்டு கண்காணித்து வருகிறது. இதற்கிடையில், போராட்டமும் தீவிரமடைந்து வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.