'மதவாத சக்திகளை தடை செய்வதென்றால் முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பைத்தான் தடை செய்ய வேண்டும்' – கேரள சிபிஎம் கருத்து

திருவனந்தபுரம்: மதவாத சக்திகளை தடை செய்வதென்றால் முதலில் ஆர்எஸ்எஸ்ஸை தான் தடை செய்ய வேண்டும் என்று கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஐந்தாண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. இந்நிலையில் இந்த அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களில் நேற்று 2வது நாளாக நடைபெற்ற சோதனையை அடுத்து தடை அமலுக்கு வந்துள்ளது.

முன்னதாக இது குறித்து கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் வெளியிட்ட அறிக்கையில், “மதவாத சக்திகளை தடை செய்ய வேண்டும் என்றால் முதலில் ஆர் எஸ் எஸ் அமைப்பினைத் தான் மத்திய அரசு தடை செய்ய வேண்டும். அதுதான் நாட்டில் பல்வேறு மத ரீதியிலான மோதல்களை உருவாக்குகிறது. அது தடை செய்யப்படுமா? எந்த ஒரு அமைப்பையும் தடை செய்வதால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடாது என்பது ஏற்கெனவே தடைகளை சந்தித்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தெரியும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட தடை செய்யப்பட்ட வரலாறு இருக்கிறது.
ஒரு கட்சியையோ அமைப்பையோ தடை செய்வதால் அது கொண்ட கொள்கைக்கு முற்றுப்புள்ளி வந்துவிடாது. வேறு ஒரு புதிய பெயரில் புதிய அடையாளத்துடன் அது மீண்டும் முளைத்து வரலாம். அதனால் அவ்விதமான அமைப்புகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்டபூர்வ நடவடிக்கைகளை மட்டுமே எடுக்க வேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் சங்க பரிவாரங்களின் விருப்பத்தின் பேரிலேயே நடைபெறுகிறது. இரண்டு மதவாத சக்திகள் மோதிக் கொண்டால் அவை பரஸ்பரம் ஒன்றை ஒன்று வலுப்படுத்திக் கொள்கின்றன. அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது” என்று கூறியிருந்தார்.

முன்னதகா மத்திய அமைச்சர் நட்டா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் தீவிரவாதத்தின் கூடாரமாகி வருகின்றன. அங்கு மக்கள் வாழ்வது கடினமாகியுள்ளது என்று கூறியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.