புதுச்சேரி: திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து, புதுச்சேரியில் இந்து முன்னணி சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. பல தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தன. 3 அரசு பேருந்துகள் மற்றும் ஒரு கல்லூரி பேருந்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சென்னை பெரியார் திடலில் கடந்த 6-ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக எம்.பி. ஆ.ராசா, மனு தர்மத்தை மேற்கோள் காட்டி, இந்து மதம் குறித்து விமர்சனம் செய்திருந்தார். அவரின் கருத்துக்கு பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் புதுச்சேரியில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தையொட்டி புதுச்சேரி நகர் முழுவதும் கடைகள் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன. குபேர் அங்காடி, உழவர் சந்தைகள் இயங்கவில்லை. முக்கிய சாலை சந்திப்புகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆட்டோக்கள், டெம்போக்கள் இயங்கவில்லை. தமிழக அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. புதுவையில் இருந்து தமிழகப் பகுதியான கடலூர், விழுப்புரம், திண்டிவனம் பகுதிக்கு பணிக்குச் செல்வோர் அரசு பேருந்துகளில் சென்றனர்.
சென்னை செல்லும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இரண்டு, மூன்று பேருந்துகளில் முற்றிலுமாக கூட்டம் நிரம்பியதும், போலீஸார் மாநில எல்லை வரை பாதுகாப்புடன் உடன் சென்று அனுப்பி வைத்தனர். முழு அடைப்பு காரணமாக பல தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தன. அதே நேரத்தில் அரசு பள்ளிகள் இயங்கின. காலாண்டு தேர்வுகள் நடந்தன.சேதாரப்பட்டு, கரசூர், தட்டாஞ்சாவடி, திருபுவனை தொழிற்பேட்டைகளிலும் நேற்று குறைவான தொழிற்சாலைகளே இயங்கின. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கின.
கல்வீசி தாக்குதல்: தனியார் பள்ளிகள் பெருமளவில் மூடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கின. மங்கலம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தின் கண்ணாடியை சிலர் கல்வீசி உடைத்தனர். வெளிமாநில நவீன பேருந்து ஒன்றும் கல் வீச்சில் சிறிது சேதம் அடைந்தது. விழுப்புரம் – புதுச்சேரி மார்க்கத்தில் நேற்று காலை இயங்கிய 3 தமிழக அரசு பேருந்துகளை வில்லியனூர் அருகே சிலர் கல் வீசி தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர். இதைத் தொடர்ந்து புதுச்சேரி – விழுப்புரம் இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மதகடிப்பட்டு எல்லையில் இருந்து மக்கள்நடந்தே புதுச்சேரிக்குள் வந்தனர். உப்பளம் பகுதியில் திறக்கப்பட்டிருந்த தனியார் பள்ளி ஒன்றை, மூடக்கோரி பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேருந்து நிலையத்தில் மறியல் செய்த நூற்றுக்கணக்கானோர் கைதானார்கள்.