சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளதைத் தொடர்ந்து, சென்னையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த காவல்துறையினருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. பல்வேறு கலவரங்கள், படுகொலைகளில் இந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன்பேரில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அப்போது 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் 2-வது முறையாக பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் நேற்றும் (செப்.28) சோதனை நடத்தப்பட்டது. டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, அசாம் ஆகிய 8 மாநிலங்களில் 8 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது.
இந்நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு ஐந்தாண்டுகள் தடை விதித்துள்ளது . இந்த தடை உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மட்டுமின்றி, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் ஐந்து வருடம் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடையைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள புரசைவாக்கம் பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக, சென்னை முழுவதும் 4000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், காவல்துறை துணை ஆணையர்கள் அனைவரும் உஷார் நிலையில் இருக்கவும் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, பாதுகாப்பைப் பலப்படுத்தவும் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.