பிஎஃப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை.. மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு மீது, நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உட்பட பல்வேறு புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக, 15 மாநிலங்களில் உள்ள 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் பல இடங்களில் கல்வீச்சு, வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது. குறிப்பாக தமிழகம், கேரளாவில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் அரங்கேறியது.

இதனை தொடர்ந்து, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களில் பிஎஃப்ஐ தொடர்புடைய இடங்களில் நேற்று 2-வது முறையாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போதும் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த 2 சோதனைகளின் போதும் பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், இந்த அமைப்புகள் இந்தியாவில் 5 ஆண்டுகள் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.