அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அதே தலைப்பில் இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்கள் கொண்ட படமாக உருவாக்கியிருக்கிறார். அதன் முதல் பாகம் எதிர்வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
படத்தை காண்பதற்கான டிக்கெட் முன்பதிவுகள் எல்லாம் படு ஜோராக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் படம் வெளியாக உள்ளதாக நட்சத்திர பட்டாளங்கள் ஒவ்வொரு மாநிலமாக சென்று புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் பொன்னியின் செல்வன் படத்தை திரையில் பார்க்க மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருந்து வருகிறார்கள். இதனிடையே முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பையே பெற்றிருந்தது. குறிப்பாக கொண்டாட்டங்கள் நிறைந்த துள்ளலான இசையாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘பொன்னி நதி பாக்கனுமே’ பாடல் பட்டித்தொட்டியெங்கும் பலராலும் கவரப்பட்டிருக்கிறது.
அதுவும் ‘பொன்னி நதி பாக்கனுமே’ என ஏ.ஆர்.ரஹ்மான் பாடத் தொடங்கியதும் பின்னணியில் ‘ஈயாரி எசமாரி’ என ஒலிக்கும் கோரஸ்-க்கு பெரும் வரவேற்பு இருந்திருக்கிறது. முதலில் கேட்பதற்கு அவை ஏதோ கோரஸ் ஜாலங்களுக்காக வைக்கப்பட்டிருப்பதாக இருந்தாலும் தமிழ் நீங்கலாக இந்த பாடலின் மற்ற மொழி பதிப்புகளிலும் வேறு வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆகவே அந்த ‘ஈயாரி எசமாரி’ என்ற வாக்கியத்திற்கு முக்கியமான பின்னணி அர்த்தம் இருப்பதாக ரா.ராஜகோபாலன் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு விளக்கமளித்திருக்கிறார்.
அதன்படி, “தமிழ் மொழியில் ஒற்றை எழுத்துகளுக்கு பொருள் இருக்கும் என்பதை அனைவருமே அறிந்திருப்போம். அதாவது, ஆ என்றால் பசு, கோ என்றால் அரசன், ஐ என்றால் அழகு என பொருள் இருக்கும். அந்த வகையில் ‘பொன்னி நதி பாக்கனுமே’ பாடலில் வரும் ‘ஈயாரி எசமாரி’ வரிக்கும் பொருள் இருக்கிறது.
ஈ + ஆரி + எச + மாரி என பிரித்தால் ஈ – வில், ஆரி – வீரன், எச – இசை, மாரி – மழை என பொருள்படும். அதாவது ‘வில் வீரனின் இசை மழை’ என்பதை தமிழ் ஒற்றை வார்த்தை அர்த்தத்தை வைத்து பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் இவ்வாறு இயற்றியிருக்கிறார்.” என ராஜகோபாலன் குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த பதிவு தற்போது நூற்றுக்கணக்கானோரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.