சிவகங்கை: பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல், டீசல் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கபட்டதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் திருபுவனம் வட்டாரத்தில் நெல் நடவு பணிகள் தொடங்கியுள்ளன.
டிரக்டர், பவர் டிரின்னர்கள், மருந்து தெளிக்கும் சாதனங்களுடன் விவசாய பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் டிரக்டர் தவிர மற்ற வாகனங்களின் பெட்ரோல், டீசல் டங்குகள் சிறிதானவை மற்றும் அவற்றை சாலைகளில் இயக்க முடியாது. எனவே பிளாஸ்டிக் கேன்களில் பெட்ரோல், டீசல் வாங்கி வந்துதான் இயக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆனால், தமிழகத்தின் பல பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து, மாநிலம் முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் கொடுக்க விதிக்கபட்ட தடையால் இயந்திரங்களை நேரடியாக கொண்டு சென்று எரிபொருள் நிரப்பும் சூழல் உருவாகியுள்ளது. உதாரணமாக 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரக்டரில் முழுமையாக டீசல் நிரப்பினால் 3 ஏக்கர் வரை உழவு பணி செய்ய முடியும்.
ஒவ்வொரு முறையும் கிராமங்களில் இருந்து பெட்ரோல் நிலையங்களுக்கு சென்று நிரப்பினால் குறைந்தபட்சம் ரூ. 500 வரை வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் விவசாய பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய கூடாது என்ற கட்டுப்பாட்டை விவசாய பணிகளை பொறுத்தவரையில் தளர்த்த வேண்டும் என்றும், அதில் மாற்று ஏற்பாடுகளை அரசு விரைந்து செய்யவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.