காய்ச்சல் காரணமாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று (செப்டம்பர் 28) 2022-2023 ஆம் ஆண்டிற்கான மருத்துவ பட்ட மேற்படிப்பு / பட்டைய படிப்பு (MD-MS/DIPLOMA) மற்றும் பல் மருத்துவர் படிப்பு (MDS) மற்றும் தேசிய வாரிய பட்ட படிப்பிற்கான (DNB) தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யபட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகு இன்னும் 2 நாட்களில் அன்பில் மகேஷ் வீடு திரும்புவார். அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எச்1என்1 வைரஸ் தான், அவருக்கு டெங்கு பாதிப்பு இல்லை, ஊடகங்களில் வரும் செய்தி தவறானது” என்று கூறினார்.