தவறான சிகிச்சையால் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்-டிஎஸ்பி பேச்சுவார்த்தை

வானூர் : தவறான சிகிச்சை அளித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, புதுவையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கிளியனூரை சேர்ந்தவர் சுகுமார். இவரது ஐந்தரை வயது மகள் சஞ்சனா. இவருக்கு காய்ச்சல் காரணமாக உப்புவேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கம்பவுண்டராக வேலை பார்க்கும் கணேசன் (54) என்பவரை சந்தித்து உள்ளனர். அவர் தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து சிறுமிக்கு ஊசி மருந்து செலுத்தினாராம். இதில் சிறுமியின் கையில் ஊசி போட்ட இடம் கருப்பாகி கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சிறுமியை புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சிறுமிக்கு தவறான சிகிச்சை அளித்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கம்பவுண்டர் கணேசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிறுமியின் உறவினர்கள் கிளியனூர் அருகே பைபாஸ் சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கோட்டக்குப்பம் டிஎஸ்பி மித்ரன் மற்றும் போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக கிளியனூர் பைபாஸ் சாலையில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்நிலையில், வானூர் தாசில்தார் கோவர்த்தனன், வட்டார மருத்துவ அலுவலர் ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் சென்று கணேசனின் வீட்டுக்கு சீல் வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.