சென்னை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முதுநிலை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. அனைத்து விண்ணப்பங்களும் சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டு இன்று (செப்.28) அதற்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “2022-2023 ஆம் ஆண்டிற்கான மருத்துவ பட்ட மேற்படிப்பு, பட்டய படிப்பு மற்றும் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் தேசிய வாரிய பட்ட படிப்பிற்கான விண்ணப்பங்கள் 19 முதல் 30 வரை ஆன்லைனில் பெறப்பட்டது. அனைத்து விண்ணப்பங்களும் சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டு இன்று (செப்.28ம்) தனித்தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகின்றன. இவை அனைத்திற்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடைபெறும். கலந்தாய்வு அட்டவணை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.
மருத்துவ பட்ட மேற்படிப்பு, பட்டய படிப்பு மேற்படிப்புகளுக்காக அரசுக் கல்லூரிகளில் 1162 இடங்களும், மருத்துவ பட்ட, பட்டய மேற்படிப்புகளுக்கான நிர்வாக கல்லூரிகளில் 763 இடங்களும், பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான அரசக் கல்லூரிகளில் 31 இடங்களும், பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான சுயநிதிக் கல்லூரிகளில் 296 இடங்களும், தேசிய வாரிய பட்டப்படிப்பு இடங்கள் 94 ஆக மொத்தம் 2,346 இடங்களும் உள்ளன. மேலும், மேற்கண்ட படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளின் எண்ணிக்கை 23, சுயநிதி கல்லூரிகளின் எண்ணிக்கை 16. விண்ணப்பித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 11,178.
தமிழகத்தில் தினசரி 100 பேர் அளவிற்கு எச்1என்1 காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். நேற்று இது 56 ஆக குறைந்துள்ளது. 6471 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் ,15,900 பள்ளிகளில் வாகனங்கள் மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு மாணவர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். 421 பேர் நேற்று வரை சிகிச்சை பெறுகின்றனர். டெங்குவைப் பொறுத்தவரை 4068 பேர் நேற்று வரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது 344 பேர் டெங்கு பாதிப்பினால் சிகிச்சை பெறுகின்றனர். 1 லட்சம் 72 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது” என்று கூறினார்.