வீடு வாங்குவதற்கோ, வாகனம் வாங்குவதற்கோ அல்லது உயர் கல்விக்காகோ நீங்கள் வங்கியில் கடன் வாங்கி இருந்தால், கூடுதல் வட்டி கட்டுவதற்கு உங்களை நீங்கள் இப்போதே தயார்படுத்திக் கொள்ளுங்கள். விரைவிலேயே வங்கிகளிலிருந்து வாங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மீண்டும் அதிகரிக்க உள்ளன.
ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமையன்று வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ ரேட் என அழைக்கப்படும் வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்த திட்டமிட்டுள்ளது என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் கடன்களுக்கு கூடுதல் வட்டி வசூலிக்கும் எனவும் இதற்கான அறிவிப்புகள் அடுத்த வாரம் முதல் வெளிவரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரிசர்வ் வங்கி அடுத்த கட்டமாக ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 50 புள்ளிகள், அதாவது அரை சதவீதம், வரை அதிகரிக்கும் என வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது 5.4 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ள வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 5.9 சதவீதமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடம் மே மாதம் வரை நான்கு சதவீதமாக இருந்த ரெப்போ ரேட் தற்போது ஆறு சதவீதத்தை தொடும் அளவுக்கு அதிவேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை ரிசர்வ் வங்கி இந்த வட்டி விகிதத்தை 1.4 சதவிகிதப் புள்ளிகள் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை கட்டாயம் உயர்த்தும் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவிலும் பணவீக்கம் அதிகமாக உள்ளது என்பதாலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற கட்டாயத்தாலும், வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்பது அவர்களுடைய பார்வை. இதைத் தவிர இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக தொடர்ந்து சரிந்து வருகிறது. ஒரு டாலர் 80 ரூபாயை கடந்து தற்போது 82 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு சமீபத்தில் அமெரிக்கா வட்டி விகிதங்களை மீண்டும் 75 புள்ளிகள் உயர்த்தியது தான் காரணம் எனவும், இதனால் இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தை உயர்த்தி ரூபாயின் மதிப்பு மேலும் சரியாமல் முயற்சிக்கும் எனவும் கருதப்படுகிறது.
பிரிட்டிஷ் பவுண்ட், யூரோ, ஜப்பானிய கரன்சி ஆகியவை சமீபத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக கடும் சரிவை கண்டுள்ளன. அத்துடன் துருக்கி, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டுமல்லாது, வளர்ந்த பொருளாதரங்களாக கருதப்படும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் பணவீக்கம் கடுமையாக உள்ளது. ஆகவே தற்போது விலைவாசி உயர்வை தடுக்க பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது உலகம் முழுவதும் பரவலாக எடுக்கப்படும் நடவடிக்கையாக உள்ளது.
ரெப்போ ரேட் உயர்வு அடிப்படையில் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வீடு வாங்குவதற்கான கடன், வாகனங்கள் வாங்குவதற்கான கடன் மற்றும் மாணவர்கள் படிப்புக்காக வழங்கப்படும் கடன் ஆகியவற்றுக்கான வட்டிகளை உயர்த்தும் என்பது வல்லுனர்களின் கருத்து. அதேபோல அவசரத்துக்கு நகைகளை அடகு வைத்து வங்கிகளில் இருந்து பெரும் கடன் மற்றும் டிவி, ஏசி, பிரிட்ஜ் போன்ற பொருட்களை தவணை முறையில் வாங்குவதற்கான கடன் ஆகியவையும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
தொழில் முனைவோர் வங்கிகளில் இருந்து பெரும் கடனுக்கான வட்டியும் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மே மாதம் முதல் வங்கிகள் பல்வேறு கடன்களுக்கான வட்டிகளை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது அடுத்த தவணை வட்டி அதிகரிப்பு அடுத்த மாதம் முதல் நடைபெறும் என கருதப்படுகிறது.
2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் கோவிட் பாதிப்பு மற்றும் பொதுமுடக்கம் காரணமாக, அரசு பல்வேறு கடன்களுக்கு வட்டி விகிதத்தை குறைக்க மானியம் அளித்து வந்தது. பொருளாதார மந்த நிலை காரணமாகவும் வட்டிகள் குறைந்த அளவிலேயே இருந்தன. கோவிட் பெருந்தொற்றுக்கு பின் பல்வேறு பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மற்றும் உக்ரைன் போர் காரணமாக தற்போது பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் ரிப்போ ரேட் மீண்டும் அதிகரிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
– கணபதி சுப்ரமணியம் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM