மதுரை: தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர் சிலை அமைக்க மக்கள் யாரும் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்று உயர் நீதிமன்றக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மேல் மாந்தையைச் சேர்ந்த திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பி.காலாடி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “என் வீட்டின் அருகே எனக்கு சொந்தமான இடத்தில் தந்தை பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளை நிறுவியிருந்தேன். 2007ல் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி நடைபெற்றதால் இரு சிலைகளும் தற்காலிகமாக அகற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் முடிந்துள்ளதால் இரு சிலைகளை மீண்டும் நிறுவ அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு அளித்தேன்.
ஆகஸ்ட் 15ல் சிலைகளை நிறுவும் பணி நடைபெற்ற போது, சூரங்குடி காவல் ஆய்வாளர் அங்கு வந்து சிலைகளை வைக்க முருகன் மற்றும் சிலர் ஆட்சேபம் தெரிவிப்பதாக கூறி பணியை தடுத்தார். தனியார் இடத்தில் சிலை அமைக்கும்போது அந்த இடம் சம்பந்தப்பட்ட நபருக்கு சொந்தமானது தானா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பல வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏற்கெனவே அங்கு வைக்கப்பட்டு சாலைப் பணிக்காக தற்காலிகமாக அகற்றப்பட்ட சிலைகளை மீண்டும் நிறுவுவதை தடுக்கக்கூடாது. எனவே தந்தை பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் முழு உருவ சிலைகளை என் சொந்த இடத்தில் நிறுவ அனுமதி வழங்க வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சதிகுமார் சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் தனது சொந்த இடத்திலேயே சிலை அமைக்க அனுமதி கோரியுள்ளார். அந்த நிலம் மனுதாரர் பெயரில் இருப்பதும், அங்கு சிலை வைக்க யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும் வட்டாட்சியர் அறிக்கை அளித்துள்ளார் என்றார்.
இதையடுத்து நீதிபதி, தமிழகத்தில் தந்தை பெரியார், அம்பேத்கரின் முழு உருவ சிலை அமைக்க யாரும் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். ஏனெனில் இரு தலைவர்களின் மீதும் தமிழக மக்களுக்கு தனி மரியாதை உண்டு. மனுதாரர் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி சிலை நிறுவ அனுமதி கோரியுள்ளார். சிலைகள் அமைக்க யாரும் ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சிலைகள் அமைக்க 2 வாரத்தில் ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.