நியாய விலை கடை மற்றும் நூலகம் திறப்பு விழாவிற்கு எம்.எல்.ஏ வராததால் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக காத்துக் கிடந்த பொதுமக்கள், அவர்களே நியாய விலை கடை திறந்து வைத்துள்ள சம்பவம் மேல்மருவத்தூர் அருகே நடந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கீழ்மருவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சக்தி ஸ்ரீநகர், எஸ்.வி.எஸ். நகர் ஆகிய பகுதியில் குடியிருப்புக்கான ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை மற்றும் நூலகம் சக்தி ஸ்ரீ நகரில் கட்டப்பட்டது. இந்த நியாய விலை கடை கட்டி ஏழு ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்த அரசு கட்டிடத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் செப்டம்பர் 28ஆம் தேதி இன்று திறந்து வைப்பதாக கூறி இருந்தனர். அதற்காக கீழ்மருவத்தூர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால், இன்று காலை 10 மணிக்கு வருவதாக இருந்த செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு இரண்டு மணி நேரத்துக்கு மேலாகியும் வராததால் பொதுமக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர் அப்பொழுது திடீரென வர இயலவில்லை எனக் கூறியதாக தெரிகிறது.
அதனால் அந்த விழாவில் கலந்து கொள்ள வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்களே ஒன்றிணைந்து நியாயவிலைக் கடை மற்றும் நூலகம் இரண்டையும் திறந்து வைத்தனர். செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, விழாவுக்கு வருவதாக கூறிவிட்டு விழாவிற்கு வராததால் பொதுமக்கள் மிகவும் வேதனையோடு திரும்பி சென்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM