டெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஏற்கனவே ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 34 சதவீத அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. அகவிலைப்படி உயர்வினால் 50 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.
அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படவுள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இதன்படி கடைசியாக கடந்த ஜனவரியில் 31 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போதைய 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வின் மூலம் 25 ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வாங்கும் ஊழியரின் ஊதியம் ரூ.1,000 அதிகரிக்கும்.