காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 51 இடங்களில் பேரணி நடத்துவதற்கு ஆர்எஸ்எஸ் சார்பில் தமிழக காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு, அம்பேத்கர் நூற்றாண்டு, விஜயதசமி ஆகியவற்றையொட்டி இந்த பேரணி நடத்துவதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனிநீதிபதி முன்பாக வந்த இந்த வழக்கு விசாரணையின்போது, சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி கொடுக்குமாறு உத்தரவிட்டது.
ஆனால், இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திருமாவளவன் மற்றும் சீமான் ஆகியோர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால், இந்த பேரணிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் கடுமையாக எச்சரித்துள்ளனர். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்த திருமாவளவன், அக்டோபர் 2 ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதிகோரி திருவள்ளூர் நகர காவல்நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதனை பரிசீலித்த நகர ஆய்வாளர் அனுமதி மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அனுமதி மறுத்துள்ள திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் மற்றும் தமிழக உள்துறை செயலாளர், தமிழக டிஜிபி ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கார்த்திகேயன் என்பவர் அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு காவல் ஆய்வாளர், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்க எந்த அதிகாரமும் இல்லை. அனுமதி மறுக்கப்பட்டதை எந்தவித நிபந்தனையுமின்றி திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தெரிவித்துள்ளார்.