ரூட் தல என்று கூறி புறநகர் ரயிலில் பயணிகளை கத்தியுடன் மிரட்டிய பச்சையப்பன் கல்லூரி மாணவன் குட்டிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூட் தல எனக் கூறி புறநகர் ரயிலில் பயணிகளை கத்தி மற்றும் கற்களை காட்டி மிரட்டியதாக பச்சையப்பன் கல்லூரி மாணவன் குட்டி மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் குட்டி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மாணவன் குட்டிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சென்னையில் உள்ள மித்ரா மறுவாழ்வு மைய ஊழியர்களுக்கு ஆறு சனிக்கிழமைகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மனுதரார் குட்டிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவனின் படிப்பு பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற காரணத்திற்காகவே இந்த நிபந்தனை முன் ஜாமீன் வழங்கப்படுவதாகவும், ஆயுதங்களைக் காட்டி பொதுமக்களை மிரட்டிய மாணவனுக்கு மனிதாபிமானத்தின் அர்த்தத்தை உணர்த்த வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.