கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி பிரமுகர் ஹரிஷ் கார் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக , அதே அமைப்பைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரையும் அவரது நண்பர் ஹரிஹரன் என்பவரையும் கைது செய்துள்ளதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை நகர இந்து இளைஞர் முன்னணி அமைப்பின் செயலாளராக இருப்பவர் ஹரிஷ். நேற்று இவரது கார் கண்ணாடி கல்வீசி தாக்கப்பட்டு உடைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை கார் கண்ணாடி உடைக்கப்பட்டதை பார்த்த ஹரிஷ் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். இது குறித்த வழக்குப்பதிவு செய்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் சம்பவம் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “இந்து இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த ஹரிஷ் என்பவரின் கார் கல்வீசி தாக்கப்பட்டது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகள் கண்டறியப்பட்டு விட்டனர். அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன், ஹரிகரன் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருவரும் குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.
விநாயகர் சதுர்த்தியின் போது சிலை வைப்பது தொடர்பாக ஹரிஷ்க்கும் தமிழ்செல்வனுக்கும் மோதல் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகவே ஹரிஷ் கார் மீது கல் வீசி தாக்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழ்செல்வனும் இந்து முன்னணி அமைப்பின் உறுப்பினராக உள்ளார். அவருடன் கைது செய்யப்பட்ட ஹரிகரன் எந்த அமைப்பிலும் இல்லை. கல்வீச்சில் ஈடுபட்டு காரை சேதப்படுத்திய இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் விரைவில் அது தொடர்பான குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM