ரூ. 500 கட்டணத்தில் ஒரு இரவு ஜெயிலில் தங்கலாம்… உத்தரகாண்ட் அரசு புது ஏற்பாடு…

உத்தரகாண்ட் மாநிலம் ஹால்த்வாணி சிறைச்சாலையில் ரூ. 500 கட்டணம் செலுத்தினால் ஒரு இரவு தங்கலாம் என்ற புதிய திட்டத்தை அம்மாநில அரசு துவங்க இருக்கிறது.

கட்டம் சரியில்லாதவர்கள் மட்டுமன்றி சுற்றுலா பயணிகள் யார் வேண்டுமானாலும் வந்து தங்கும் வகையில் ‘ஜெயில் டூரிஸம்’ என்ற புதிய ஏற்பாடு செய்துள்ளது.

1903 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த சிறைச்சாலையின் பெரும்பாலான பகுதி எந்த வித பயன்பாடும் இல்லாமல் குப்பை கிடங்காக மாறிவருவதை அடுத்து சிறைத்துறை உதவி கண்காணிப்பாளர் சதீஷ் சுஃஹிஜா இந்த திட்டத்தை கையிலெடுத்துள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சன்ஹாரெட்டி மாவட்ட மத்திய சிறை இதுபோன்று சுற்றுலா மையமாக மாற்றப்பட்டது.

220 ஆண்டுகளுக்கு முன் ஹைதராபாத் நிஜாம் மன்னர்களால் கட்டப்பட்ட இந்த சிறையை அருங்காட்சியகமாக முதலில் மாற்றிய மாநில அரசு பிறகு சுற்றுலா பயணிகளுக்கான தங்கும் விடுதியாக மாற்றியது.

இதனைத் தொடர்ந்து உத்தரகாண்டிலும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ராசி மற்றும் ஜாதகப் படி ஜெயிலில் தங்க வேண்டியவர்களும் இவர்களுக்கு ஆலோசனை சொல்லும் ஜோசியக்காரர்களுக்கும் இந்த ‘ஜெயில் டூரிஸம்’ திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.