பொன்னியின் செல்வன் அறிமுகம்-7: சாமர்த்தியசாலி; காதலன்; நண்பன்; வந்தியத்தேவன் கதாபாத்திரம் ஒரு பார்வை

பொன்னியின் செல்வன் முதல்பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரை காணக் காத்திருக்கிறது. அதையொட்டி பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய கதாபாத்திரங்களுக்கான ஒரு அறிமுகம்தான் இந்தப் பகுதி.

வந்தியத் தேவன்

பொன்னியின் செல்வன் நாவலின் வழியே சோழ தேசம் செல்ல விரும்புபவர்களை தன் குதிரையில் தனக்குப் பின்னே அமர்த்தி சோழ தேசம் அழைத்துச் செல்லும் வாசகர்களின் சக பயணிதான் இந்த வந்தியத் தேவன்.

பழமையான சிற்றரச குலமான வாணர் குலத்தைச் சேர்ந்தவன் வந்தியத் தேவன். இளவரசர் ஆதித்த கரிகாலனின் உற்ற நண்பன். குந்தவையின் காதலன். ஆதித்த கரிகாலன் கொடுத்த முக்கிய ஓலையை எடுத்துச் செல்லும் சாமர்த்தியமான தூதுவன். வாசகர்களை சோழ தேசம் அழைத்துச் செல்பவன்.

`பொன்னியின் செல்வன்’ நாவலில் உள்ள பெரும்பாலான கதாபாத்திரங்கள் வந்தியத்தேவன் மூலமே அறிமுகமாகிறது. வாணர் குலத்தைச் சேர்ந்த வந்தியத் தேவன் காஞ்சியில் இருக்கும் ஆதித்த கரிகாலனின் உற்ற நண்பன். சோழ தேசத்தை யாரும் நெருங்க முடியாதபடி காக்கும் விதமாகவும், சோழ தேசத்தை விரிவாக்கவும் காஞ்சியில் படைதிரட்டியிருந்தார் ஆதித்த கரிகாலர். அந்த சமயத்தில், பழையாறையில் நோய்வாய்ப்பட்டு இருக்கும் சோழப் பேரரசர் சுந்தர சோழரின் அரியணையைக் கைப்பற்ற சிலர் சூழ்ச்சிகளும், வஞ்சகமும் செய்து கொண்டிருந்தனர். இதை அறிந்து கொண்ட ஆதித்த கரிகாலர், இந்த செய்தியை ஓலையில் எழுதி, அதை பழையாறையில் இருக்கும் சுந்தர சோழரிடமும், இளவரசி குந்தவையிடமும் ரகசியமாகக் கொடுக்கும்படி வந்தியத் தேவனிடம் கொடுத்து அனுப்புகிறார். இப்படித்தான் வந்தியத் தேவன் நாவலின் தொடக்கத்திலேயே அறிமுகமாகிறான்.

வந்தியத் தேவன்- கார்த்தி | ஆதித்த கரிகாலன்- விக்ரம்

வந்தியத் தேவன் அரச குலத்தைச் சேர்ந்த மாவீரன் அதேசமயம் சாமர்த்தியம் கொண்ட புத்திசாலி. பெண்களைக் கவரும் அழகு கொண்டவன். ஆனால், எளிதில் யாரையும் நம்பிவிட மாட்டான். அரசகுலத்தைச் சேர்ந்தவன் என்பதால் எந்தச் சண்டை என்றாலும் துணிச்சலுடன் எதிர்கெகொள்பவன். ஆதித்த கரிகாலர் கொடுத்த ஓலையைப் பத்திரமாக கொண்டு செல்லும் பொறுப்பு அவனிடம் கொடுக்கப்பட்டுள்ளதால் முடிந்த அளவிற்கு அவனது சேட்டைகளை ஓரம் கட்டி வைத்து சோழ தேசம் நோக்கிப் பயணம் சென்றுகொண்டிருப்பான்.

வந்தியத் தேவன்- கார்த்தி

முதன் முறையாக சோழ தேசம் நோக்கிச் செல்லும் வந்தியத் தேவன், தான் இதுவரைக் கேட்டறிந்த சோழ தேசத்தின் பிரமாண்டத்தைத் தன் கண்களால் நேரில் பார்த்த வண்ணம் சென்று கொண்டிருப்பான். அவன் காணும் சோழ தேசத்தின் அழகையும், வளத்தையும், பொன்னியின் நதியின் செழுமையையும் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்திய வண்ணம் வாசகர்களை நாவலின் வழியே அழைத்துச் செல்வான்.

வந்தியத் தேவன் வழியே முதலில் அறிமுகமாகும் கதாபாத்திரம் ஆழ்வார்க்கடியான் நம்பி. வந்தியத் தேவன்- ஆழ்வார்க்கடியான் நம்பி இருவருக்குமான பரஸ்பர நட்பு, வந்தியத் தேவனின் சந்தேகப் பார்வைகள், இருவரின் உரையாடல்கள், மர்மப் பெண்ணான நந்தினி பற்றி நம்பி கூறும் உண்மைகள் என இருவருக்குமானக் காட்சிகள் நாவலின் ஓட்டத்தை சுவாரஸ்யமாக்கிக் கொண்டேச் செல்லும்.

ஆழ்வார்க்கடியான் நம்பி – ஜெயராம் | வந்தியத் தேவன்- கார்த்தி

பொன்னியின் செல்வனின் முக்கியக் கதாபாத்திரமான நந்தினி மற்றும் குந்தவை கதாபாத்திரமும் வந்தியத் தேவன் மூலமே அறிமுகமாகிறது. நந்தினியின் உதவியுடன் சோழ அரண்மைக்குள் நுழையும் வந்தியத் தேவன் பின்னர் நந்தினியின் நயவஞ்சகத்தை அறிந்து கொள்கிறான். தன் அழகில் யவரையும் வீழ்த்தும் நந்தினியின் வலையில் சிக்காதவர் வந்தியத் தேவன். ஆனால் ஆதித்த கரிகாலனின் தங்கையான இளவரசி குந்தவையின் காதல் வலையில் சிக்கி விடுவார். இப்படி சுந்தர சோழர், பொன்னியின் செல்வனான ‘அருள்மொழி வர்மர்’, பழுவேட்டரையர்கள், ஆபத்துதவிகள், ரவிதாஸன், பூங்குழலி உள்ளிட்ட நாவலின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் அனைத்தும் வந்தியத் தேவன் மூலமே அறிமுகமாகிறது.

குந்தவை – த்ரிஷா | வந்தியத் தேவன்- கார்த்தி

ஆதித்த கரிகாலனின் உண்மையான ஒற்றனாக, உற்ற நண்பனாக தனது உயிரையும் பணயம் வைத்து தன் அரச கடமைகளை நிறைவேற்றி வரும் வந்தியத் தேவன் பின்நாளில் தான் காதலித்த ஆதித்த கரிகாலனின் தங்கையான குந்தவையைத் திருமணம் செய்துகொள்வார். அருள்மொழி வர்மரின் சோழ ராஜ்யத்திற்கு உறுதுணையாக இருப்பார்.

மணிரத்னத்தின் இயக்கத்தில் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக் காண இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வந்தியத் தேவனாக நடிகர் கார்த்தி நடித்துள்ளார். வந்தியத் தேவன் காதாபாத்திரம் பற்றிய உங்கள் பார்வையை கமென்ட்டில் பதிவிடவும்.

வந்தியத் தேவன்- கார்த்தி

4 முறை பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த விகடன், இப்போது 5-ம் முறையாக வரும் அக்டோபர் 8, 9, 10 ஆகிய நாள்களில் மீண்டும் நம் வாசகர்களை வந்தியத்தேவன் வழியில் ஒரு வரலாற்றுப் பயணத்துக்கு அழைத்துச் செல்லவிருக்கிறது.

முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404

முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.