முப்படை தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினண்ட் ஜெனரல் அனில் சவுகானை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முப்படை தலைமை தளபதியாக இந்திய ராணுவத் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். இவர், ராணுவம், விமானம், கப்பற்படை என மூன்று படைகளின் தலைமை தளபதியாக விளங்கினார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோர் பலியாகினர். அவரது மறைவுக்கு பிறகு முப்படை தலைமை தளபதி பதவி காலியாக இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று, முப்படை தலைமை தளபதியாக, இந்திய ராணுவ விவகாரத் துறை செயலாளர் அனில் சவுகானை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இவர், இந்திய ராணுவ விவகாரத் துறை செயலாளராகவும் தொடர்வார் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஏறக்குறைய 40 ஆண்டுகள் ராணுவத் துறையில் இவர் அனுபவம் பெற்றவர் என, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.