தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளன்று ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தது. இதனையேற்று, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை திரும்ப பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சுதந்திர தினத்தயொட்டி மத்திய பாஜக அரசு மேற்கொண்ட ஹர் கர் திரங்கா எனும் பரப்புரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து. அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இதுபோன்ற சில திட்டங்களையும் பாஜக அரசு முன்னெடுக்கவுள்ளதாக சமயம் தமிழில் ஏற்கனவே ‘ரூபாய் நோட்டுல வாழுறாரு காந்தி’… பாஜக அடுத்த ப்ளான்? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக, சித்தாந்த மற்றும் கொள்கை ரீதியாக பாஜக பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. 1948 ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட நாதுராம் கோட்சேயால், மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபின், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட நிலையில், அவரது பிறந்தநாளன்று ஊர்வலம் நடத்த அந்த அமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதனிடையே, அக்டோபர் 2ஆம் தேதி நாள் காந்தி பிறந்தநாளன்று தமிழகம் தழுவிய அளவில் மத நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம் நடத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பேரணிக்கு எதிராக இந்த மனித சங்கிலி போராட்டம் பார்க்கப்படுகிறது.
“சனாதன சக்திகளுக்கு இங்கு இடமில்லை. சங்பரிவார்களின் வன்முறைகளுக்கு இங்கே இடம்தரமாட்டோம், அவர்களின் சதிகளை, சதி திட்டங்களை முறியடிப்போம் என்று விரும்புகின்ற அனைவரும் பங்கேற்கக்கூடிய ஒரு அறப்போர்தான் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம். இதில் தோழமைக் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும்.” என
தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
விசிகவின் இந்த போராட்டத்துக்கு மே 17 இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி சாரா அமைப்புகளும், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து கலந்து கொள்வதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில், விசிகவின் சமூக நல்லிணக்க பேரணியில் நாம் தமிழர் கட்சி கலந்து கொள்ளும் என
அறிவித்துள்ளார். அரசியல் முரண்களை தாண்டி நோக்கம் சரியாக இருப்பதால் நாம் தமிழர் கட்சி கலந்து கொள்ளும் என சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நலன் கொண்ட ஜனநாயக கட்சிகள் இந்த பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருவதற்கிடையே, தொடக்கம் முதலே ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சீமான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சீமானின் இந்த அறிவிப்பு வரவேற்பை பெற்றுத்தந்துள்ளதுடன், முக்கியமான அரசியல் நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.
கடந்த 2009 ஆம் ஆண்டு நாம் தமிழர் இயக்கத்தை மதுரையில் தொடங்கினார் சீமான். அடுத்த ஆண்டே மே மாதம் இந்த அமைப்பு அரசியல் கட்சியாக உருமாற்றம் அடைந்தது. தேர்தல் அரசியலில் நுழைந்ததில் தொடங்கி தற்போது வரையில் தனித்துப் போட்டி என்ற புள்ளியில் இருந்து சீமான் மாறாமல் இருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் கணிசமாக உயர்ந்தும் வருகிறது. குறிப்பாக, இளைஞர்களிடத்தில் அக்கட்சி வலுவாக சென்றடைந்துள்ளது.
ஆனாலும், எந்தவொரு போராட்டமாக இருந்தாலும் சரி, ஆர்ப்பாட்டமாக இருந்தாலும் சரி, ஆதரவு தெரிவிப்பதாக இருந்தாலும் சரி நாம் தமிழர் கட்சி அதிலும் கூட தனித்தே செயல்பட்டு வந்துள்ளது. மற்ற அமைப்புகள், கட்சிகளின் கொள்கைகள் வேறாக இருந்தாலும், ஏதோ ஒரு புள்ளியில் ஒரு நோக்கத்துக்காக அவை ஒன்றினைந்து ஒரே மேடையை அலங்கரிக்கும். அந்த மேடையை கூட நாம் தமிழர் கட்சி இதுவரை அலங்கரிக்காமல் இருந்து வந்தது.
“நாட்டில் ஜனநாயகத்தை விரும்பும் சீமான், முதலில் தன் தனிப்பட்ட ஆளுமையிலும் கட்சியிலும் அதைக் கொண்டு வர வேண்டும். சொந்தக் கட்சித் தொண்டர்களிடம் மட்டுமல்ல, சக தோழமை இயக்கங்கள்கூடவும் அவர் அனுசரித்துப் போவதில்லை.” என்ற விமர்சனங்கள் சீமான் மீது முன்வைக்கப்படுவதுண்டு. இந்த சூழலில், விசிகவின் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி கலந்து கொள்ளும் என சீமான் அறிவித்துள்ளது, அரசியல் அரங்கில் கவனம் ஈர்த்துள்ளது.