சென்னை: முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து முப்படைகளின் புதிய தளபதியை தேர்வு செய்வது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை நடத்தியது. இந்நிலையில், முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
1961-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி பிறந்த லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் பள்ளிப் படிப்பை கொல்கத்தாவில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் பயின்றார். கடக்வாஸ்லாவில் உள்ள என்டிஏ எனப்படும் தேசிய பாதுகாப்புக் கல்லூரி மற்றும் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயின்ற இவர் 1981-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கோர்க்கா ரைபிள்ஸ் படைப் பிரிவில் பணியில் சேர்ந்தார். இவர் 2021-ம் ஆண்டு ராணுவத்தின் கிழக்குப் பகுதியின் கமாண்டராக பணி ஓய்வு பெற்றார். மேலும் இந்திய ராணுவ நடவடிக்கைகள் பிரிவு தலைமை இயக்குநராகவும், ஐ.நா சபை திட்டங்களிலும் பணியாற்றி உள்ளார்.