கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சிப் பணிகளில் போதிய அளவு முன்னேற்றம் ஏற்படாததால் கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் கவுதமசிகாமணி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் கவுதமசிகாமணி தலைமையில் இன்று ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்றது. ஆட்சியர் ஷ்ரவன்குமார் முன்னிலையில் பேசிய கவுதமசிகாமணி, “மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளில் மந்தமாகவே நடைபெறுகிறது. குறிப்பாக தடுப்பணை, ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடங்கள் போன்றவை கடந்த 3 ஆண்டுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பல திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமலேயே உள்ளது. இத்திட்டங்களின் பெயர்கள் இந்தி மொழியில் உள்ளதால், அவை கிராமப்புற மக்களை சென்றடையவில்லை.
இது தொடர்பாக பலமுறை மக்களவையில் பேசியும் அதற்கு மத்திய அரசு இணங்கவில்லை. எனவே, இத்திட்டங்களின் பெயர்களை அலுவலர்கள் மக்களிடத்தில் புரியும் வரையில் தமிழ்மொழியில் எடுத்துக் கூறி திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பு நிதியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களை உரிய காலத்திற்குள் முடிக்காவிட்டால், அவை மீண்டும் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிடும்.
எனவே, நாம் இவ்வுளவு மேற்கொண்ட திறன் உபயோகமற்றதாகிவிடும். இங்கு குறிப்பிடப்பட்ட 30 திட்டங்களில் பெரும்பாலானவை துவக்கப்படாமலேயே உள்ளது. புத்தகத்தில் முடித்துவிட்டு என்று குறிப்பிட்டால் மட்டும் போதாது. கள நிலவரத்தை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிடவேண்டும்.அடுத்த கூட்டத்தில் அனைத்துப் பணிகளிலும் முன்னேற்றத்தோடு உங்களை சந்திக்க விரும்புகிறேன்” என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, திட்ட அலுவலர் மணி, மகளிர் திட்ட அலுவலர் தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.