பெரும்பாலான நேரங்களில் பலரும் அவசரத்தில் நோ பார்க்கிங் என்பதைக் கவனிக்காமல் வாகனத்தை சாலையோரத்திலேயே நிறுத்திவிட்டுச் சென்றுவிடுவார்கள். சிலர் நோ பார்க்கிங் என்று தெரிந்தும்கூட வாகனத்தை அங்கேயே நிறுத்திவிடுவார்கள். பின்னர் அதற்குப் போக்குவரத்து அதிகாரிகள் அபராதமும் விதிப்பார்கள். ஆனால், இங்கிலாந்தில் ஒரு பார்க்கிங் நிறுவனம், ஒருவர் பார்க்கிங்கில் தன்னுடைய காரை கோட்டைத் தாண்டி 3 இன்ச் தள்ளி நிறுத்தியதாக 8,700 ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது.
இங்கிலாந்தின், ஸ்வான்சீ(Swansea) நகரின் பார்க்கிங் ஒன்றில், 59 வயதான ஜூலியன் க்ரிஃபித்ஸ்(Julian Griffiths) என்பவர் குறிப்பிட்ட அந்த கோட்டுக்குள் காரை நிறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார். பின்னர் 10 நிமிடம் கழித்து காரை எடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதன்பிறகு இரண்டு வாரங்கள் கழித்து அந்த பார்க்கிங் நிறுவனத்திடமிருந்து, பார்க்கிங் விதிமுறைகளை மீறி காரை நிறுத்தியதாக 8,700 ரூபாய் அபராதம் செலுத்துமாறு அந்த நபருக்கு நோட்டீஸ் வந்திருக்கிறது.
இது தொடர்பாக வெளியான புகைப்படத்தில் கார், பார்க்கிங் செய்யப்பட்டிருந்த இடத்தில் குறிப்பிட்ட கோட்டுக்குள்தான் கார் நிறுத்தப்பட்டிருந்திருக்கிறது. ஆனால், காரின் பின்புறம் மட்டும் சரியாக 3 இன்ச் கோட்டுக்கு வெளியே இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பார்க்கிங் நிர்வாகத்தின் நோட்டீஸைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், அந்த நோட்டீஸுக்கு எதிராக மேல்முறையீடு செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்தச் சம்பவம் குறித்து அந்த நபர், “கார் பார்க்கிங் நிறுவனங்கள் வருமானத்தை ஈட்டுவதற்காகத் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு” எனக் கூறினார்.