பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை: மத்திய அரசு அதிரடி| Dinamalar

புதுடில்லி: ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ (பி.எப்.ஐ.,) அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பி.எப்.ஐ. எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு 2006ல் கேரளாவில் துவக்கப்பட்டது. இது புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பிரிவினைவாத கருத்துக்களை பரப்பி நாட்டில் பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், இதன் உறுப்பினர்கள் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவி அளிப்பதோடு பயிற்சி முகாம்களை நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு 19 வழக்குகளை விசாரித்து வருகிறது.

இந்நிலையில் என்.ஐ.ஏ. – அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய விசாரணை அமைப்புகள் தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் கடந்த 22ம் தேதி சோதனை நடத்தியது. பி.எப்.ஐ. அமைப்பின் தலைவர்கள், துணை தலைவர்கள், நிர்வாகிகள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அன்றைய தினம் 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து நாடு முழுதும் ஏழு மாநிலங்களில் போலீசார் நேற்று மீண்டும் நடத்திய சோதனையில், பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கைது செய்தனர்.

latest tamil news

5 ஆண்டுகள் தடை:


இந்நிலையில், பி.எப்.ஐ., அமைப்பை சட்டவிரோதமானது என மத்திய அரசு அறிவித்துள்ளது. பி.எப்.ஐ., அமைப்புக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், ஊபா சட்டத்தின் கீழ் ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பையும், அதன் தொடர்புடைய அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

துணை அமைப்புகளுக்கும் தடை

பிஎப்ஐ அமைப்பின் துணை அமைப்புகளான
*ரிஹாப் இந்தியா பவுண்டேஷன்(ஆர்ஐஎப்)
*கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா(சிஎப்ஐ)

*அனைத்து இந்திய இஸ்லாமிக் கவுன்சில்(ஏஐஐசி),

*தேசிய மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பு(என்சிஹெச்ஆர்ஓ),

*தேசிய பெண்கள் முன்னணி,

*ஜூனியர் பிரண்ட்,

*எம்பவர் இந்தியா பவுண்டேஷன்,

*கேரள ரிஹாப் பவுண்டேசன் ஆகிய அமைப்புகளுக்கும் சட்டவிரோத செயல்கள் தடைச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்

தடை செய்யப்பட்டது குறித்து பி.எப்.ஐ மாநில தலைவர் முகம்மது சேக் அன்சாரி கூறுகையில், ‛மத்திய அரசு ஜனநாயக அமைப்பான பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பைத் தடை செய்ததாக அறிவித்துள்ளது. இந்த சட்டவிரோத, ஜனநாயக விரோத தடை அறிவிப்பை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் இதையொட்டி பி.எப்.ஐ பெயரில் செயல்பட்டுக் கொண்டிருந்த அனைத்து செயல்பாடுகளும் நிறுத்திக்கொள்ளப்படுகிறது’ என்றார்.

4000 போலீஸ் குவிப்பு

பி.எப்.ஐ அமைப்பு தடை உத்தரவை தொடர்ந்து அசம்பாவிதங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 4000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

எச்சரிக்கை

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் போராட்டம் நடத்துவதற்காக திரண்ட பி.எப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ அமைப்பை சேர்ந்த இஸ்லாமிய பெண்களை கோவை மாநகர போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.