டெல்லி; இனிமேல் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல்களின் ஐஎம்இஐ எண்ணை பதிவு செய்வது கட்டாயம் என மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. விற்பனைக்கு முன் ஃபோன் IMEI எண்ணைப் பதிவு செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கி உள்ளது. இந்த புதிய நடவடிக்கை 2023 ஜனவரி1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஒவ்வொரு மொபைல் போனுக்கும் 15 இலக்கங்கள் கொண்ட தனிப்பட்ட ஐஎம்இஐ (IMEI) அடையாள எண் இருக்கும். இது பேட்டரியை பொருத்தும் இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த அடையாள எண், சிம் கார்டு ஸ்லாட் உடன் தொடர்புடையது. ஒரே மொபைல் போனில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தினால் அந்த மொபைல் போன் இரண்டு ஐஎம்இஐ (IMEI) எண்களைக் கொண்டிருக்கும். மொபைல் போன்களின் ஐஎம்இஐ (IMEI) எண்களை மாற்றினால், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை கடந்த 2017ம் ஆண்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுவாக ஒருவருடைய தொலைபேசியில் இருந்த்து *#06# என்ற எண்ணிற்கு டயல் செய்தால், தங்கள் போனின் ஐஎம்இஐ திரையில் காட்டப்படும். அதை நாம் பாதுகாப்பாக அதை எழுதிவைத்துக் கொள்வது நல்லது. ஒருவேளை நமதுபோன் திருடு போனால், அதை கண்டுபிடிக்க ஐஎம்இஐ பேருதவியாக இருக்கும்.
இந்த நிலையில், இனிமேல் புதிதாய போன் விற்பனை செய்யும்போதே, போனின் ஐஎம்இஐ எண்ணை மத்தியஅரசின் ஐசிடிஆர் (ICDR) இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த புதிய நடைமுறை 2023ம் ஆண்டு ஜனவரி 1ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவித்து உள்ளது.
தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட ஸ்மார்ட்போன்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க இந்திய அரசு ஒரு ஸ்மார்ட் நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, உலகளாவிய அனைத்து ஃபோன் உற்பத்தியாளர்களும், சந்தையில் விற்பனை செய்வதற்கு முன், ஒவ்வொரு கைபேசி யின் IMEI எண்ணையும் இந்திய போலி சாதனக் கட்டுப்பாடு போர்ட்டலில் (https://icdr.ceir.gov.in) பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது. இந்த புதிய விதியின்படி, அனைத்து கைபேசிகளுக்கும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கக்கூடிய தனித்துவமான IMEI எண்ணை பதிவு செய்து கட்டாயமாகியுள்ளது.
இது பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் அல்லது ஃபீச்சர் போன்கள் திருடப்பட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ, தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் அவற்றைத் தடுக்க இது உதவும் என தெரிவித்துள்ள, மத்திய தொலைத்தொடர்பு துறை ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்சம் 52,883 தொலைபேசிகள் திருடப்படுகின்றன அல்லது தொலைந்து போகின்றன, அவற்றில் 3.5% மட்டுமே புகாரளிக்கப்படுகின்றன என்றும் இந்த புதிய விதியால், போன்கள் திருடப்பட்டால் அதை மீட்பது இலகுவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் கருப்பு சந்தைப்படுத்துதல் அதிரிகத்துள்ள நிலையில், அதன்மூலம் பயங்கரவாத அமைப்புகளின் செயல்களும் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செல்போன்கள் மட்டுமின்றி, இறக்குமதி செய்யப்பட்ட ஐபோன்கள் மற்றும் சாம்சங் கேலக்ஸி மாடல்கள் உள்ளிட்ட அனைத்து செல்போன்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.