காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் திக்விஜய் சிங் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி உள்ளார். இவரது மகனும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், அதற்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒருவருக்கு மேல் போட்டியிட்டால் தேர்தல் நடைபெறும். இதில் பதிவாகும் வாக்குகள் 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். காங்கிரஸ் கட்சியில் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சசி தரூர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இவரை எதிர்த்து சோனியா காந்தி குடும்பத்தின் விசுவாசியான ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசொக் கெலாட் போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் விதியான ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற அடிப்படையில் அவர் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
முதலமைச்சர் பதவியை சச்சின் பைலட்டிற்கு விட்டுக் கொடுக்க, முதலமைச்சர் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், அம்மாநில அரசியலில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும் ஏற்படவில்லை. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து விலக, அசோக் கெலாட் முடிவு செய்துள்ளதாகவும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய மாட்டார் என்றும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடவில்லை என்பதால், மூத்தத் தலைவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய் சிங் தேர்தலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் இருக்கும் திக்விஜய் சிங், இன்றிரவு டெல்லிக்கு வந்து, சோனியா காந்தியை சந்தித்து பேசுவார் என்றும், நாளை அல்லது நாளை மறுநாள், வேட்புமனு தாக்கல் செய்வார் என்றும் கூறப்படுகிறது.