மக்களவை தேர்தல் வருகிற 2024ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதில், வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைப்பதற்கு பாஜக சார்பில் பல்வேறு வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
அதற்கு முன்பாக குஜராத், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தல்களில் வெற்றி பெறுவது குறித்தும் பாஜ ஆலோசித்து வருகிறது. இதையடுத்து, தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களுக்கு பாஜக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த மாநிலங்களில் கட்சி ரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அத்தோடு, மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி தேர்தல்களில் வெற்றி பெற வியூகங்களை அமைக்குமாறு பொறுப்பாளர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தி இருக்கிறது.
அதே சமயம் எதிர்க்கட்சிகள் சார்பில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ், பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் உள்ளிட்டோர் முயற்சித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்கும்போதே
காங்கிரஸ்
தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உத்திப்பிரதேசம் முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி பிரதமர் வேட்பாளராக போட்டியில் இறங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் தரம்வீர் சவுத்ரி செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ‘மாயாவதியை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தினால் அவர்களுடன் கூட்டணி அமைக்க தயார்.
எதிர்க்கட்சிகள் மரியாதைக்குரிய விதமாக எங்கள் கட்சியை அணுகி அவர்களுடைய செயல்திட்டங்களை மாயாவதியிடம் தெரிவித்தால் கூட்டணி வைப்பது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்’ என கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் நீடித்து வரும் நிலையில், 3வது முறையாக பிரதமர் பதவியை மகுடமாக சூட்டி, மோடிக்கு அழகுப்பார்க்க பாஜக தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது.
இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பிரதமர் வேட்பாளராக இறங்க உள்ளதாக வெளியான தகவல் பாஜக வட்டாரத்தை கதிகலங்க செய்துள்ளது.