சினேகன் மீது எப்ஐஆர் பதிவு செய்ய சொல்லி உத்தரவை நான் நீதிமன்றத்தில் வாங்கிவிட்டேன் – நடிகை ஜெயலட்சுமி
நல்லது செய்ய வரும் எங்களை போன்றோருக்கு சினேகன் போன்றவர்களால் மன உளைச்சல் ஏற்படுவதாக நடிகை ஜெயலட்சுமி ஆதங்கம்
தன் மீது ஆதாரமில்லாமல் புகார் அளித்து மனஉளைச்சலை ஏற்படுத்திய சினேகனை விட மாட்டேன் என நடிகை ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகத்து மாதம் சினேகம் பவுண்டேசன் என்ற தனது அறக்கட்டளை பெயரை நடிகை ஜெயலட்சுமி தவறாக பயன்படுத்தி, பொதுமக்களிடம் பணம் வசூல் செய்வதாக பாடலாசிரியர் சினேகன் மோசடி புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து அவரது குற்றச்சாட்டை மறுத்த ஜெயலட்சுமி, தன்னையும் தனது அறக்கட்டளையையும் அவதூறாக பேசி வரும் விளம்பரம் தேடி வரும் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் ஒன்றை காவல் நிலையத்தில் கொடுத்தார்.
இருவரும் மாறி மாறி புகார் அளித்த நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் சினேகன் மீது ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, அவதூறு பரப்பும் வகையில் பேசிய சினேகன் மீது வழக்குபதிவு செய்து, அடுத்த மாதம் 19ம் திகதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலட்சுமி கூறுகையில்,
‘இந்த பிரச்சனை தொடர்பாக பல அவதூறுகளை சினேகன் கூறி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு சினேகன் என்னை அழைத்தாராம், தனிமையில் அவரை சந்தித்து காபி குடிக்க நான் அவரை கூப்பிட்டேனாம். பொதுவெளியில் இதை சொன்னதுடன் இல்லாமல், புகார் மனுவிலும் இதையே எழுதி தந்திருக்கிறார்.
இதனால் நான் அதிர்ச்சியடைந்து, இதுக்கெல்லாம் ஆதாரம் எங்கே? ஆதாரமேயில்லாமல் என் மீது எப்படி புகார் தர முடியும் என்று கேட்டேன்.
இதற்காகத்தான் மறுபடியும் ஒரு புகாரை கமிஷனர் அலுவலகத்தில் தந்தேன். மூன்று, நான்கு முறை எங்களிடம் பொலிஸார் தரப்பு பேசினார்கள், சமரசம் செய்தார்கள்.
ஆனால், ஒரு மாதம் கழித்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று காவல்துறையினர் கூறி விட்டார்கள். காவல்துறை மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்தேன், அதனால்தான் நீதி மன்றத்திற்கே போனேன்.
சினேகன் மீது எப்ஐஆர் பதிவு செய்ய சொல்லி உத்தரவை நான் நீதிமன்றத்தில் வாங்கிவிட்டேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம்.
எனக்கும் சினேகனுக்கும் பழக்கமே கிடையாது. என்னை ரொம்ப அசிங்கப்படுத்திட்டார். இவர் செய்த அசிங்கத்தால், என்னுடைய அறக்கட்டளை மூலம் நன்மை பெறுபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பா இல்லாத குழந்தைங்களை நாங்கள் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் சினேகன் போன்றோர் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தந்தால், நல்லது செய்ய வரும் எங்களை போன்றோருக்கு மன உளைச்சல்தான் ஏற்படுகிறது.
பொதுவெளியில் பெண்களை பற்றி ஆதாரமே இல்லாமல் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பவர்களுக்கு இது ஒரு பாடம், தர்மம் இன்று வென்றுள்ளது’ என தெரிவித்தார்.