திருவனந்தபுரம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது 18வது நாள் நடைப்பயணத்தை தனது சொந்த தொகுதியான வயநாட்டில் மேற்கொண்டு வருகிறார். நாடு முழுவதும் 3,500 கி.மீ. ஒற்றுமை நடைப்பயணத்தை கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தொடங்கினார். கடந்த 10ம் தேதி கேரளாவுக்கு சென்ற அவர், தொடர்ந்து அம்மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். கேரளாவில் 18வது நாளாக ராகுல் தனது சொந்த தொகுதியான வயநாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று நடந்து வருகின்றனர். அப்போது ராகுல் காந்தியுடன் நடைப்பயணத்தில் பங்கேற்ற சிறுமி ஒருவர், உற்சாக மிகுதியால் ஆனந்த கண்ணீர் வடித்தபோது ராகுல் அவரை தேற்றினார்.
இதையடுத்து கேரள விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளையும் ராகுல் சந்தித்து பேசினார். கேரளாவின் வந்தூரில் உள்ள நடுவத்து என்ற இடத்தின் வழியாக சென்று இன்று மலப்புரம் மாவட்டத்தில் பயணம் மேற்கொள்ள இருக்கும் ராகுல், நிலம்பூர் பேருந்து நிலையம் அருகே 20வது நாள் பயணத்தை நிறைவு செய்யவுள்ளார். கேரளாவில் 7 மாவட்டங்களில் 450 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள ராகுல்காந்தி, அக்டோபர் 1ம் தேதி முதல் கர்நாடகாவில் தனது ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கவிருக்கிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, காஷ்மீரில் பயணத்தை நிறைவுசெய்யவுள்ளார்.