காளையார்கோவில்: மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் காளையார்கோவிலிலிருந்து நடராஜபுரம் வரை சுமார் 8 கிலோமீட்டர் சாலை செல்கிறது. இந்த சாலையை தான் மோர்க்குழி, அய்யனார்குளம், அரியநாச்சி குடியிருப்பு, பனங்குடி, நடராஜபுரம் பகுதி மக்கள் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டது. அதன்பின்னர் பராமரிக்கப்படவில்லை. இதனால் இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலை மிகவும் மோசமாக உள்ளதால் இந்த கிராமங்களுக்கு அவசர காலத்திற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் கூட வர மறுக்கின்றனர். இந்தச் சாலையை விரைவில் சீரமைத்தால் காளையார்கோவில் பகுதி மக்கள் மிக அருகில் உள்ள பனங்குடி ரயில் நிலையத்திற்கு சென்று ரயில் சேவையை பயன்படுத்த ஏதுவாக இருக்கும். மேலும் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் பல பகுதிகள் இதன் மூலம் குறுகிய தூரத்தில் இணைக்கப்படும். எனவே இந்தச் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.