புதுடெல்லி: நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் இலவச அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கும் திட்டத்தை, மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு நாடு முழுவதும் தீவிரமடைந்த நிலையில், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதிலும் ரேஷன் கடைகளின் மூலம் 5 கிலோ இலவச கோதுமை அல்லது அரிசி வழங்கும் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் தமிழத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 5 கிலோ புழுங்கல் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து வந்ததால், இத்திட்டம் 6 முறை நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே, போதுமான உணவு தானியங்கள் கையிருப்பு உள்ளதை ஆய்வு செய்து உறுதிப்படுத்திய அரசு அதிகாரிகள், இத்திட்டம் மேலும் 3 முதல் 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சில தினங்களுக்கு முன் தெரிவித்தித்தனர். இந்நிலையில், இலவச ரேஷன் வழங்கும் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இது குறித்து ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் கூறுகையில், `வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிய இருந்த பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டம் வரும் டிசம்பர் 31 தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 80 கோடி பேர் பயன் அடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.44,762 கூடுதலாக செலவாகும்,’ என்று தெரிவித்தார்.
* பண்டிகை காலத்தில் உதவும்
பிரதமர் மோடி, “இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை நீட்டிக்க அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு, இலவச அரிசி பெறும் 80 கோடி மக்கள், பண்டிகை காலத்தில் பயனடைய உதவி உள்ளது,’ என்று கூறினார்.