புதுடெல்லி: பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ), நீண்ட காலமாகவே மத்திய அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்துள்ளன.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக நடைபெற்ற வன்முறைப் போராட்டம், கட்டாய மதமாற்றம், முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்தல், சட்ட விரோத பணப்பரிமாற்றம், தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு போன்றவற்றில் பிஎஃப்ஐ பங்கு தொடர்பாக பாதுகாப்பு அமைப்புகள் நீண்ட காலமாக கண்காணித்து வந்தன.
பிற மதங்களை ஆதரிக்கும் அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கொல்வது, முக்கிய நபர்கள் மற்றும் இடங்களை குறிவைத்து வெடிபொருட்களை சேகரித்தல், இஸ்லாமிய அரசுக்கு ஆதரவளிப்பது, மக்களிடையே பயத்தை ஏற்படுத்த பொது சொத்து களை அழிப்பது என அந்த அமைப்பு மீது குற்றசாட்டுகள் உள்ளன. பிஎஃப்ஐ-க்கு எதிரான முந்தைய விசாரணைகளின் ஒரு பகுதியாக 45 பேருக்கு என்ஐஏ தண்டனை பெற்றுத் தந்துள்ளது. 355 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
கடந்த ஆண்டு ராமநவமி கொண்டாட்டத்தின் போது கோவா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம்ஆகிய மாநிலங்களில் வன்முறையில் ஈடுபட்டதாக பிஎஃப்ஐ மீது குற்றம் சாட்டப்பட்டது.
பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட சிமி அமைப்புடன் பிஎஃப்ஐ நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அப்போது அவர் கூறினார்.
காங்கிரஸ், ஐயுஎம்எல் வரவேற்பு
கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறும்போது,“பிஎஃப்ஐ அமைப் புக்கு தடை விதித்திருப்பது நல்ல விஷயம். இதுபோல ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தடைவிதிக்க வேண்டும். கேரளாவில், பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மதவாதத்தை சமமாக எதிர்க்க வேண்டும்.” என்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் (ஐயுஎம்எல்) மூத்த தலைவர் எம்.கே.முனீர் கூறும் போது,“பிஎஃப்ஐ அமைப்பின் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம். அந்த அமைப்புக்கு தடை விதித்தது வரவேற்கத்தக்கது. இந்த அமைப்பு இளைஞர்களை தவறாக வழிநடத்துவதுடன் சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. இதுபோல மத ரீதியான சித்தாந்தத்துடன் செயல்படும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தடை விதிக்க வேண்டும்” என்றார்.
விஸ்வ இந்து பரிஷத்
விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி)அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் நேற்று கூறும்போது, “பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. பிஎஃப்ஐ அமைப்பு தீவிரவாத செயலின் மையமாக செயல்பட்டு வந்தது. அந்த மையத்தைஅழிக்காதவரை தீவிரவாதத்திலிருந்து இந்தியா விடுதலை பெறமுடியாது. அந்த அமைப்பின் ஆதரவாளர்களையும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், சிமி அமைப்பு தடை செய்யப்பட்ட பிறகு பிஎஃப்ஐ உருவானது போல வேறு ஒரு அமைப்பு உருவாகும்” என்றார்.