பி.எஃப்.ஐ-க்கு தடை..! – உள்துறை அமைச்சகம் என்ன சொல்கிறது?!

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் கடந்த 22 ஆம் தேதி அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மாநில போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 106 பேர் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனைக்குக் கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் பல இடங்களில் கல்வீச்சு, வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளாவில், இந்த சோதனைகளுக்குப் பின் விரும்பதகாத சம்பவங்களும் நடந்தது.  இதனைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, அஸ்ஸாம், டெல்லி, குஜராத், மராட்டியம், தெலங்கானா ஆகிய 8 மாநிலங்களில் பி.எப்.ஐ தொடர்புடைய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை 2-வது முறையாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போதும் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ அலுவலகத்தில் என்.ஐ.ஏ ரெய்டு.

இந்த 2 சோதனைகளின் போதும் பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இந்தநிலையில், பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகம்

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த அமைப்புகள் அல்லது முன்னணிகள் நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் விதத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபடுதல், அதற்கு நிதியளித்தல் உள்பட நாட்டின் அரசியல் சட்ட அமைப்பை மதிக்காமல் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் தொடர் குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த அமைப்பின் கொடிய செயல்களை கட்டுப்படுத்துவது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. அந்தவகையில், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த 8 அமைப்புகள்  சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 பிரிவுகளின் கீழ் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக நிதி வசூல் செய்ததன் காரணமாகவும், இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என உத்தரபிரதேசம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் பரிந்துரைத்தது” எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சகம்

இந்தநிலையில், கோவையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் அருகே ஏராளமான இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தினர். பின்னர், அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். இதேபோல், நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறலாம் என்பதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழகத்திலும் ரோந்து பணியையும், கண்காணிப்பு பணியையும் காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.