மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். இப்படத்தில் நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் என்ற முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் செப் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
நிகழ்வில் பேசிய கார்த்தி “இப்போதுதான் விருமன் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்து பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களாக படத்தை மற்ற நகரங்களிலும் சென்று சேர்க்கும் விதமாக ப்ரமோஷனுக்காக சென்றிருந்தோம். தொடர்ச்சியாக படத்தைப் பற்றி சொல்லி சொல்லி, இப்போது அவர்களும் பொன்னியின் செல்வன் என்ற பெயரை தெளிவாக உச்சரிக்கிறார்கள். கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. கூடவே விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ரஹ்மான், மணிரத்னம் என மிகப்பெரிய திறமையாளர்களுடன் பயணித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
படத்திற்கான டிக்கெட் புக்கிங்கைப் பார்க்கும் போதே படத்தைப் பற்றிய ஆர்வம் மக்களிடம் எந்த அளவு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சமீபத்தில் ஒரு நண்பர் ரயிலில் தான் சென்ற போது, அங்கு பலரும் பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாசிக்கிறார்கள் என்று புகைப்படத்தை அனுப்பி வைத்தார். பொன்னியின் செல்வன் புத்தகத்தின் சேல்ஸ் இன்னும் அதிகரித்திருக்கிறது. வாசிக்கும் பழக்கமும் அதிகமாகியிருக்கிறது. சிலர் ஆடியோ புத்தகமாக, பொன்னியின் செல்வனைக் கேட்க துவங்கியிருக்கிறார்கள். இதெல்லாம் சந்தோஷமாக இருக்கிறது.
மணிரத்னம் சார் முதல் முறையாக ஒரு பீரியட் படத்தை எடுத்திருக்கிறார். இதன் காட்சிகளுக்கு என எந்த ரெஃபரன்ஸூம் கிடையாது. அப்போதைய காலம் எப்படி இருந்திருக்கும் என்பதை எல்லாம் ஆய்வு செய்து படத்தில் கொண்டு வந்திருக்கிறார்.
அப்புறம், நீங்கள் எல்லோரும் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறீர்கள் எனத் தெரியும். அதே ஆர்வத்துடன் நானும் இருக்கிறேன். ஏனென்றால் நானும் படத்தை இன்னும் பார்க்கவில்லை. இது என்னுடைய திரைப் பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும். என்னதான் உலகம் முழுக்க படத்தை பற்றி கொண்டு சேர்த்தாலும், படத்தின் வெளியீட்டுக்கு முன் நம்ம ஊரில் பத்திரிகையாளர்களை சந்திக்க விரும்பினேன். அதனால் தான் இந்த உடனடி சந்திப்பு. ஆனால் அது ரிலீஸூக்கு இவ்வளவு நெருக்கத்தில் அமையும் என எதிர்பார்க்கவில்லை.
இதற்கு அடுத்ததாக தீபாவளிக்கு என் நடிப்பில் சர்தார் படம் வருகிறது. அதுவும் முற்றிலும் வேறொரு வகையில் உருவாகியிருக்கிறது. எனக்கு ஓய்வே இல்லை என்று மட்டும் புரிகிறது. தொடர்ந்து நல்ல படங்களைக் கொடுக்க ஓடிக் கொண்டே இருப்பேன்” என்றார்.