நாய்களை கொடூரமாக தாக்கி, அவற்றை சிறை பிடிப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவுக்கு மாநகராட்சி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார்.
வேலூர் மாநகராட்சியில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனால் நாய்கள் தொல்லையும் ஏராளமாக உள்ளன. நாய்களின் அட்டகாசத்தால் சில இடங்களில் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையும் உள்ளது. இது குறித்து மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு புகார்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு ஆலோசனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் வசந்தபுரம் பகுதியில் நாய்களை கொன்று அவற்றை பிடிப்பது போல வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது சமூக மற்றும் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். “வேலூர் மாநகராட்சியில் நாய் தொல்லை உள்ளது உண்மை. ஆனால் தற்போது நாய்கள் பிடிக்கும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
அந்த வீடியோ வேலூரில் எடுக்கப்பட்டது அல்ல. வேலூரில் நாய்களை கொன்று பிடிப்பதாக வதந்தி பரப்பி உள்ளனர். இது போன்ற சம்பவங்கள் வேலூரில் நடைபெறவில்லை. தவறான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பரப்ப வேண்டாம்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM