திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முதல் நாள் பெரிய விசேஷ வாகனத்திலும், இரண்டாவது நாளான நேற்று காலை சின்னசேஷ வாகனத்திலும் இரவு அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மூன்றாவது நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் விதமாக மனிதர்களிடம் உள்ள விலங்களுக்குன்டான தீய எண்ணங்களை போக்கி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமி வீதஉலாவில் கோயில் ஜீயர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடியபடியும், கேரள சண்டை மேளம், நாதஸ்வரம், மும்பை டிரம்ஸ் மேளம், மற்றும் பக்தர்களின் கோலாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இரவு முத்து எப்படி பரிசுத்தமானதோ அதை போன்று நம் மனதில் தீய எண்ணங்கள் இன்றி பரிசுத்தமாக இறைவனை அடைய வணங்கினால் முக்தி பெறலாம் என்பதை விளக்கும் வகையில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று இரவு முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி தயார்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.