சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து கடந்த 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி தமிழக உள்துறை செயலாளர் டிஜிபி மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீதிபதி இளந்திரையன் முன் ஆஜரான ஆர்எஸ்எஸ் தரப்பு வழக்கறிஞர்கள், தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அணி வகுப்புக்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறி முறையீடு செய்தனர். கடந்த 22 ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும்.
மற்ற கட்சியினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளிக்கும் நிலையில், தங்கள் அமைப்பின் சார்பில் அணிவகுப்பு நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாககல் செய்தால், அந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் தரப்பில், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியாக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.