தமிழக அரசியலில் மையத்தை நோக்கி நகரும் பாஜக: என்ன செய்கிறார் அண்ணாமலை?

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழ்நாட்டில் நாங்கள் தான் எதிர்கட்சி என்று பாஜக கூறிவருகிறது. அதிமுக பிரதான எதிர்கட்சியாக இருக்கும் போதிலும் அதோடு கூட்டணி வைத்து நான்கு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்ற பாஜக நாங்கள் தான் எதிர்கட்சி என தொடர்ந்து கூறிவருகிறது.

பாஜகவினரின் இது போன்ற பேச்சுக்கள் அதிமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தினாலும் உட்கட்சிப் பிரச்சினைகளை சமாளிப்பதே அக்கட்சிக்கு சவாலாக உள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே இனி தமிழ்நாட்டில் திமுக Vs பாஜக என்ற நிலை தான் இருக்கும் என பாஜகவினர் கூறிவந்தனர்.

பாஜக தலைவராக அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே அக்கட்சியை தொடர்ந்து லைம் லைட்டில் வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சர்ச்சைப் பேச்சுக்கள் மூலமாகவே தன் பக்கம் கவனத்தை ஈர்ப்பதாக அண்ணாமலை மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

இந்த மாதம் முழுவதும் தமிழக அரசியல் களத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் சுற்றியே விவாதங்கள் நடைபெறுகின்றன. இது குறித்து அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம்.

திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா திராவிடர் கழக நிகழ்ச்சி ஒன்றில் மனுஸ்மிருதிக்கு எதிராக பேசியதை இந்துக்களுக்கு எதிராக பேசியதாகவும், பெண்களுக்கு எதிராக பேசியதாகவும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பிரச்சாரம் மேற்கொண்டன. ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்பு போராட்டங்களும் பாஜகவால் நடத்தப்பட்டன. இருபது நாள்கள் இந்த பிரச்சினை அணைந்துவிடாமல் கொண்டு சென்றது பாஜக.

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல், டீசல் பாக்கெட்டுகளை வீசிச் சென்ற சம்பவம் பல இடங்களில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக பாஜக பிரச்சாரம் மேற்கொண்டது.

அதைத் தொடர்ந்து அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. நீதிமன்றம் அனுமதி வழங்கிய போதும், தமிழக காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சமூக நல்லிணக்கப் பேரணி முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிராக பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஓர் அணியில் சேர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அரசியல் அரங்கில் ஏதேனும் ஒரு சம்பவத்தை நிகழ்த்தி பேசு பொருளாக மாறுகிறது, அல்லது அரசியல் முக்கியத்துவம் பெற்ற சம்வத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மேலெழுந்து வர பாஜக முயற்சிக்கிறது என்கிறார்கள். இதற்கு எதிர் தரப்பு பதிலளிக்கவோ, எதிர் வினையாற்றவோ வேண்டிய கட்டாயம் உருவாகிவிடுவதால் பாஜகவுக்கு அது மேலும் சாதகமாகிவிடுகிறது என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.