RSS பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 471 திருக்கோவில்களில் கையடக்க கணினி மூலம் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூசைகளுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப திருக்கோயில்களில் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பணம் செலுத்த கையடக்க கணினி வாயிலாக டிஜிட்டல் பண பரிவர்த்தன முறை முதற்கட்டமாக சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்பட்டது என்றும், தற்போது இந்த திட்டம் 471 திருக்கோயில்களில் தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்தத் திட்டத்தை, விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி தெரிவித்தார். 

உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நிலையில் பல்வேறு சட்டம் ஒழுங்கு காரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கேள்விகளுக்கும் அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்தார்.

சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் மதத்தின் பெயரில் பிரிவினை உருவாகக்கூடாது என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்..

100 திருக்கோவில்களில் இந்தாண்டு புனரமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறிய அமைச்சர் சேகர் பாபு, இதுவரை 300 திருக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது என்பதைத் தெரிவித்தார். ஆலயங்களில் சிறப்பு தரிசனத்திற்கு என தனி வழிமுறைகள் உள்ள நிலையில், பக்தர்கள் அதனை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கோவில்களில் கையூட்டு பெற்று கொண்டு சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி அளிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த அவர், சிறப்பு தரிசன வழிமுறைகளை உரிய முறையில் கடைபிடிப்பதே ஆலயத்திற்கு நன்மை தரும் என்பதை பக்தர்கள் புரிந்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

சட்டம் ஒழுங்கு காக்க வேண்டும் என முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்காத வகையில் நல்ல முடிவை அறிவிப்பார். திராவிட மாடல் என்பதை தினம் தினம் நிருபித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

கலகத்தை உண்டாக்குவது, பிரச்சனை ஏற்படுத்துவதும் மதம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்துவதும் திராவிட மாடல் அல்ல. பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முதலமைச்சர் கனிவாகவும் இருப்பார் இரும்பாகவும் இருப்பார் என ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.